Monday, October 27, 2014

இளங்காலை பயணங்கள் :

நடுநிசியை  நனைத்த மழை
தீர்ந்து விட
விடிய துவங்கும்
இளங்காலை..!

“ எங்கு செல்கிறோம் .. கோவிலுக்கா ?”இவர்
  “ நகர்வலம் .. “ என்கிறேன் நான் .

சிலுசிலுக்கும் குளிர்காற்று
முகம் மறைக்க
இருசக்கர வாகனத்தில் நாங்கள் ..

ஈரக் கூந்தல் சொட்ட சொட்ட ..
தோள் பற்றி ...

ஆற்றுப் பாலம் கடக்கையில்
விலகும் இருளில்
ஒளிரத் துவங்கும் கதிர்..

எழிற்கோலம் எழுதும்
இனிய வானம் ..

தாரைகள் தரையிறங்க
மிச்சம் கவிழும்
மழைப் பருகி விரைகிறோம்
நாங்கள் ..


# நினைவுகள் தொடர்கதை ..!
நட்ட நடு இரவில்
நெற்றிப் பொட்டில்
பட்டுத் தெறித்தது
ஒற்றைத் துளி !
“அம்மா மழை “ என்றேன்.

அம்மா
அப்பாவை எழுப்ப
அடுக்களைப் பாத்திரமெல்லாம்  
இடம் பெயர்ந்தன .
காலருகே , தலையருகே
வலமும், இடமுமாய்
தலை விரித்த குடைகளென
மழை ஏந்தின

“ அடுத்த மழைக்குள்
ஓடு மாற்ற வேண்டும் “
இது அப்பா.
“ஐந்து மழைக்காலமாய்
மாறாத பேச்சும்
மாற்றாத ஓடுகளும்  “
என்பாள் அம்மா .

கன்னத்தில் நீர் தெறிக்க
நேற்றிரவு 
கணவரை எழுப்பினேன்.
“நாளை ஏசி பழுது பார்க்க
ஆளை அழைக்கிறேன் “ என்றார்.


மாறித்தான்  போனது வாழ்க்கை !

Tuesday, August 26, 2014

களையும் கம்பீரம்

முகம் காட்டா 
விழுப் புண்கள் 
தழும்பென
அடி மனதில் ..!

வருடித் தருகையில் 
மறுமொருமுறை
வலிகள்
பிறப்பெடுக்க ..

உடன்
கால்கள் துவளும்
கம்பீரம் தொலைத்து ..!

Sunday, June 8, 2014

நம் வாழ்வு அழகானது "

எட்டு மணிக்கே
" களைத்திருக்கிறேன் ..." என்கிறேன்

" இப்போதே உறங்கிடு " என
எடுத்துத் வருகிறாய்
போர்வையை. ...

அழுத்தம் சூழ்ந்த
என் மௌனத்தை
அழகெனவே
சகித்துக் கொள்கிறாய் .

அர்த்தமற்ற சீற்றத்துடன்
நான் கீறுகையில்
அணைக்கும் பார்வையால்
அமைதி செய்கிறாய்

சுகமாய் எனைச்
சுமந்து செல்கிறாய்
வயதின் வலிகளை
மறைத்தபடி.

இணைந்தே செல்லலாம் வா
அன்பின் வெளியில் ...!
"
நம் வாழ்வு அழகானது "
என கூவிக் கொண்டே ..!
 — 

Thursday, May 29, 2014

வலி அறியா காகம்...!



நலிவுற்ற நேரம்
தலை
அமரும்..

பின் 
களைப்புற்ற
கண்களைக்
கொத்த
துவங்கும்.

எதிர்வினை
இன்மை
உறுதி எனில்
இடையின்றி ..
இடர் தொடரும்..

எருதின்
வலி
அறியா
காகம்...!

- மரியா சிவா
29-5-2014

Wednesday, May 21, 2014

வனப்பு

கணவன் வீடு செல்லும்
மகளின்
கைப்பையில்
ஒளிந்து கொள்கின்றன
அம்மாவின் புன்னகையும்
அப்பாவின் அதிர் சிரிப்பும் . .!

பின்புறமாய் கழுதைக் கட்டி
" இன்று சாம்பாருக்கு என்ன பெயர் ? "
அம்மாவை ஓட்டும்
நையாண்டி இல்லை

தந்தையின் மடியில்
தலை வைத்து
"என்றும் அப்பா பெண் "
எனும் கொஞ்சல் இல்லை.

உடன் பிறந்தவருடன்
" திடும்" என வெடிக்கும்
உப்பு பெறா
சண்டைகள் இல்லை ..

என்ன செய்யலாம் ?

மகளுடன்
விடைபெறும்
இல்லத்தின்
நகைப்பும்,
வனப்பும்.!

Tuesday, May 20, 2014

அப்போதெல்லாம் ..


அப்போதெல்லாம் ..

வரப்புகளில் கொக்கு
வாய்க்காலின் நண்டு.

நீர்பரப்பில் 
இடை அசைத்து செல்லும்
வாத்து ..

தொழுவத்தில் பசு
தொடும் தூர அணில்.

கழுத்து மணியாட
குதித்தோடும் ஆடு

மூடித் திறந்தவுடன்
தாய் மடி நீங்கி
ஓடப் பார்க்கும்
கோழிக்குஞ்சு

'தோ ட்ருவி "
" இதான் தாக்கா "
"பவ் பவ் நாய்க்குட்டி "
" மியா மியா பூனை "

மகளின் மொழியில்
மழலை பேசி
அழுகை மாற்றிய
அழகிய காலங்கள்
மறைந்தன .. ..

இன்று ..

சுவர்கள் சலித்து,
பொம்மைகள் எறிந்து
வெளியில் செல்ல
எத்தனித்து
சிறுபாதம்
உதைத்தழுதாள் பாப்பா.

வாசலில் நின்றால்
கண்ணுக்கெட்டிய தூரம்
காரும், சைக்கிளும்
தென்பட
உச்சத்தில் சென்ற
அழுகை ..

சட்டென .
அடங்கியது
கைகொட்டி சிரித்தாள்
பாப்பா

சிரம் சாய்த்து
புறம் வந்த
காகம் பார்த்து ..
20-05-2014

Friday, May 9, 2014

இப்படியாய் நிகழ்ந்தது ..
-------------------------------------------
அலுவலகத்தில் ஒரு நாள் ..
“மேடம் ஸ்டேப்ளர் பின் இருக்கா ?” புதிதாய் மாற்றலில்
வந்தவர் கேட்கிறார்,
“தேடித் தரேன் ..” என்றேன் .

நிஜமாகவே தேடித்தான் தரனும். டேபிள் டிராயர் அவ்வளவு அடைசல்.

ஒரு வழியாய் குடைந்து , கண்டு பிடித்து தர 15 நிமிடம் ஆனது.
கொஞ்ச நேரம் கழித்து வேறேதோ கேட்க , மீண்டும் போராடி தேடி தந்தேன்.

மறுபடி ஒரு அழைப்பு ... , சிடுசித்து வைத்தேன்.

அடுத்த நாள் காலை ...
அலுவலகம் வந்து அமர்ந்த உடன்
“ உங்க டேபிள் டிராயர் சாவி கீழே இருந்தது’ என்று தந்தார் அதே நபர்.

தலையைப் பின்னால் நானே தட்டிக் கொண்டு திறந்துப் பார்த்தேன்.

அதிர்ந்துப் போனேன்.
மிக சீராக , அழகாய் அடுக்கப்பட்டு இருந்தது.
சின்ன சின்ன பெட்டிகளில் குண்டூசி , ஜெம் கிளிப் , ஸ்டேப்ளர் பின்...
எழுதும் பேனாக்கள், எழுதா பேனாக்கள் பிரிக்கப்பட்டு.
துண்டு சீட்டுகள் அடுக்கப்பட்டு ( சில கவிதைகளும் அடக்கம் )..
கார்பன் காகிதம் ஒரு ஒருகவரில்.
பாக்கெட் சைஸ் பைபிளும் , பாரதியார் கவிதைகளும் ஒருபுறம்..!
நாலணா , எட்டணா நாணயம் கூட ஒரு கண்ணாடி பெட்டியில் ..

ஒரு நன்றி சொல்லவில்லை.
கடுங் கோபத்துடன் முறைத்தேன்.
சிடுசிடுத்தேன் .

இது நடந்து முப்பது வருடமாகி விட்டது..
அந்த நண்பர் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்.

நான் அவசர அவசரமாய் கலைப்பவற்றை அடுக்கி தந்து கொண்டு ...
என்னுடன் ... என் கணவராக. ...!

அதே பொறுமை, அதே நிதானம், அதே புன்னகை..அதே நட்பு !

அதைவிட ஆயிரமாய் பெருகிய அன்பும், கனிவும்.....காதலும் ..!

முதற்பரிசு கூட நினைவில் இருக்கிறது ..
இவர் திருப்பதி சென்ற போது தேடி வாங்கிய அன்னைமேரி படம் போட்ட சாவி கொத்து. ..!
( அதைக் கொடுத்து விட்டு , திட்டு வாங்கிக் கொண்டார். )

தொன்று தொட்ட காலமாய்
தோற்ற காதல்களைப்
போற்றி விட்டோம் ..!
வென்று விட்ட காதலையும்
யாரேனும் பாடக் கூடும்
என்னைப் போல ..!

வாழ்த்துக்கள் ..
வாழ்த்துங்கள் ..!!

அன்று
நான் அச்சப் பட்டேன் ..

இன்று
என் மகள் அஞ்சுகிறாள்...

என்றேனும்
அவள் மகளேனும்
அச்சம் தவிர்க்க கூடும் ..

இரவின் வெளியில்
தனித்து இயங்க ..!!

ஒளிர்க இந்தியா ..!

முடிவில்லா தேடல்கள்.
முற்று பெறா இலக்குகள் ,,...

இடையறா வாதங்கள் 
ஈடேறா கவலைகள் ...

தொடர் வண்டியென
துரத்தல்கள்

ஒரு நாழிகை
உறைகையில்
உள் கவிழும் மௌனத்தில் .

ஒளிர்ந்திடும்
மனச்சுடர் ..!

சமரசங்கள் இல்லையேல் 
இனிமைகள் உணர்வதில்லை.

வளைவுகள் இல்லா பாதை 
நிலை கொண்டு சேர்ப்பதில்லை .

சரிவுகள்
உரைத்திடும்
உயரத்தின் உயர்வினை ..

இனிய நாள்.

மாற்றி எழுத வேண்டும்.

அலகில் சருகை சுமந்த 
குருவியாய் சமைத்த இல்லம் 

எப்போது பிரித்தாலும்
ஏதேனும் கதை சொல்லும் புத்தகம் .

அலமாரி சேலைகள் , அணிகள்

காத்து வைத்த
கண்ணாடி பாத்திரங்கள்.

உற்ற தோழியாய்
உடன் ஆடிய ஊஞ்சல் ..

என் பெயர் சொல்லும்
இன்னபிற பொருள் எல்லாம்

மாற்றி எழுத வேண்டும்.
நான்
மரிக்கும் முன் ..

எதற்கும் முன்

ஆண்டாண்டாய் காணும்
அவலங்கள் மூட்டிவிட்ட
நெஞ்சின் தணலை
நீர்த்திடா சினத்தை

மற்றும் ஒரு தலைமுறைக்கு
மாற்றி எழுத வேண்டும்.!

மாற்றம் காணாமல்
நான்
மரிக்கும் முன்.

இருள்சூழ் வானில் 
எழும் மின்னொளியென
எழிலான “தீபம் “ என்
இல்ல மாடத்தில் சுடர்விட வருகுது...

இருகரம் ஏந்தி
இடையின்றி இறைஞ்சினேன்.
அளவிலா இறையின் கருணை
அமுதென பொழிந்தது ..

இழைத்திட இழைத்திட
மணக்கிற சந்தனமாய்
மனமெல்லாம் சுகந்தம்

"மகிழ்வென" ஒரு சொல்லில்
.உரைத்திட முயன்றேன் ...
பெருகிடும் களிப்பில்
கடலென பொங்கித்
தணிகிறேன்...!



அலையாடும் கடலென
மலை மேவும் காற்றென
இகம் விரவும் ஒளியென
இதழ் விரியும் மலரென

இவையான
இயற்கை நிகழ்வென
இயல்பாக வர வேண்டும் ..
எமக்கான
உரிமையும் ,விடியலும் ..

உயரும் கரத்தினின்று
வழிவது அமிழ்தே எனினும்
வணங்கிப் பருக
வாய்ப்புகள் இல்லை ..!

என்றும்
யாசிப்பை விழைவதில்லை
அரசிகள் ... !


உஷ்....

பாப்பா படிக்கிறாங்க ..!
அதிகாலை சென்னைப் பயணம் ..

குளிரும் இருளும் விரவும் பொழுதில்
கார்ப் பயணம் வெகு சுகம்..
கருமை கலைந்து சாமபல் பூக்கும்
சாம்பல் மறைந்து வெள்ளியாகும்
திட்டு திட்டாய்
சின்ன மேகங்கள் பின் நகர
தங்க நிற கதிரவன்
மெல்ல
தலைதூக்கும்
கணத்தைத் தரிசிக்க வேண்டும்...

- இனிய அதிகாலை வணக்கம் 

Thursday, May 8, 2014

புரிதலின் 
நிறைவில் 
பூக்கிற 
முறுவலின் 
இடனறிந்து 
இறங்கி
நலம் கேட்கும்
அறிவற்ற கண்ணீரை
நெறி செய்யவோ ?
அன்றி
“ போகட்டும் “ என
புறக்கணிக்கவோ ?

சிறகசைத்து... 
சிறகசைத்து ...
பறக்கிறேன்.. 
காற்றின் திசையில் ..!
“எப்படி இருக்கே ? “என 
நலம் உசாவும் 
தொலைபேசி அழைப்பு 

“ சாப்டாச்சா ? “ 
ஒற்றைசொல்லில்
கட்டி வைக்கும் குறுஞ்செய்தி ..

நடுவில் தொலைந்த
நட்பொன்று இடும்
நிலைத் தகவல் விழைவு

புகைபடத் தொகுப்பில்
உறைந்திருக்கும்
குறும்பும் குழந்தைமையும்
கொஞ்சும்
மகனின்
சிறுவயது வெண்சிரிப்பு.

மகளுடன் அலைப் பேசுகையில்
பின்னணி இசையென
“ ரியா”வின் குரல்..

நினைவுகளை மீட்டும்
எண்பதுகளின் பாடல் ..!

ஈரம் சுமந்த
கவிதை ..

இது போன்ற
ஏதோ ஒன்று
போதும் ..
என் நாளை இனிமை யாக்க !


மதம் கூறும் 
நெறிகள் மறுத்து 
மனிதம் உரைத்த தலைவன்.

சமூக அநீதியைச் சாட 
சவுக்கைச் சொடுக்கிய
முதற் போராளி ..

அன்பை , அமைதியை
உண்மையை
உரத்து உரைத்த உன்னதன்.

இயேசு என்பது
பெயரில்லை
மதமும் இல்லை
என்
உயிரில் கலந்த
உறவு. !
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்



இன்றைய சமையல் ..
எடுத்து வைத்த புத்தாடை 
அழகுக் குறிப்பு ..
குழந்தை வளர்ப்பு 
அணிகலன்கள் 
எண்ணற்ற பேசுபொருள்

அம்மாக்கள் மகள்களுக்குள்
இழையோடும்
தடைபடா
இடையறா
உரையாடல்கள் ..!!!

‘ என்ன சாப்பிட்டாய் ?’
“ எங்கே இருக்கிறாய்?’
“ முடி வெட்ட கூடாதா”
“ இளைத்துப் போகிறாய் ?”

அம்மாக்கள் –மகன்களுக்கிடையே
சின்னஞ்சிறு கேள்விகள்
சிக்கனமான பதில்கள் என
சொற்கோர்த்து சொற்கோர்த்து
சரசரவென முடியும் உரையாடல்..

கரைந்தும் நெகிழ்ந்தும்
கலங்கித் தவித்தும்
பிரியம் சுரக்கும் உணர்வெல்லாம்
புரிய இயல்கிறது.
பேசும் சில வார்த்தைகளில் ..
அருகில் நின்றாலும்
தொலைவில் சென்றாலும் ..!

# அம்மா –மகன்


நீ 
காடு திருத்தி 
வீடு அமைக்கையில் –
அருகிருந்து 
கல்லுடைத்தேன் ..
மண் சுமந்தேன்

நீ
கழனியில் உழும் வேளை
களைப் பறித்தேன் ..
கதிர் அறுத்தேன்..

காலப் போக்கில்
உன்னுடன்
கற்பித்தேன்
காவல் காத்தேன்
நோய் தீர்க்கும் நேரம்
தாதியானேன்.

எல்லையில்லா வானம் போல்
துறைகள் விரிந்துச் செல்ல
எங்கும் , எதிலும்
என்னைப் பொருத்திக் கொண்டேன்

மனுக்குல உயர்ச்சியை
வரையும்
எழுது கோல்கள்
பெண் பங்களிப்பை
மறைப்பதற்கில்லை
மறுப்பதற்கில்லை

உயரும் செங்கொடி
ஓங்கிப் பறக்கட்டும்
பெண்
உழைப்பின் கயிறுதனில் ..

பெண் உழைப்பைப் போற்றும்
“மே தின வாழ்த்துக்கள் “
-

கட்டில் கீழிருந்து 
எட்டிப்பார்க்கும் 
சிவப்புப் பந்து

குட்டிக் கரணம் 
அடிக்கும்
முயல் பொம்மை

மறந்துச் சென்ற
சிறிய கரண்டி

அலமாரி துணிகளுடன்
கலந்திருக்கும்
பூ போட்ட ஜட்டி

கலகல சிரிப்பை
ஒளித்திருக்கும்
கிலுகிலுப்பை .

விட்டுச் சென்ற
பொருளெல்லாம்
உன்
பட்டு முகத்தை
முன் கொணர

பூக்குவியlலென சூழும்
மணத்தை
நுகர்ந்து
நினைவில் தோயும் இல்லம் ..

LOVE YOU RIA
( ரியா இரட்டை பின்னலுடன் ...)
வீடு
-----
" பாலா வீடு ..
நளினி வீடு .."
என்பாள் அம்மா ..
(பாலா நளினி ... வீட்டுக் குழந்தைகள் )

" ரிக்கி வீடு
ஜாக்கி வீடும் " உண்டு
(ரிக்கியும் , ஜாக்கியும் வளர்ப்பு நாய்கள் ..!)

" பால்காரர் வீடு
எல் ஐ சி காரர் வீடு "

அடுத்தடுத்த வீடுகளின்
அடையாளம் குறிக்க
அம்மாவின்
சொற்றொடர்கள் ..

போகட்டும் ..

ஒருமுறை
" அய்யர் வீட்டு அம்மா
செட்டியார் வீட்டு முருங்கை " என்றாள்

அடிமனதில்
கனறும்
சினத்தோடு
வினவினேன் ..

" இன்னும் என்ன ?
"அய்யர் வீடு, செட்டியார் வீடு
பெயர் சொல்லு " என்றேன்

" பெயர் யாருக்கு தெரியும் ? "
உடன் வந்தது பதில் ..

குழம்பி போனேன்
நம் வீட்டின் அடையாளம்
எதுவென ?

அம்மா சொன்னாங்க ....
" டெலிபோன்காரங்க வீடு ..!"

இன்று
-----------

மென் குளிரும்
மெல்லிசையும் சூழ
காலைப் பயணம்.

பூத்தூறல் பொழியும்
மேகங்கள் உடன் உலா.

நெடுஞ்சாலை
புறமிருந்து
ஈர்த்தது சின்ன கடை.

எளிமை, தூய்மை
கனிவும் கலந்த கவனிப்பு.
சுவையான உணவு
சுகமானது.. !

உண்ட பின்
கை கணினியில்
கண் பதித்து
நகர்கிறேன்.

கடை கடந்த
நொடியில்
பின் சிரசில்
இடித்தன

சொல்ல மறந்த
நன்றியும் ,
கொடுக்க மறந்த
புன்னகையும்..

என்ன செய்து என்ன ?
என்னை நான் வெறுத்தேன். !


// 8-5-2014//

Saturday, February 22, 2014

சுட்டுவிரலின்
வெட்டுக் காயம்.!

உதட்டில் தெறித்த 
சுட்ட எண்ணை ..

நழுவி சிந்தி
காலில் விழுந்த
குழம்பின் கொதிப்பு..

நெடி மிளகாய்
அரைக்கையில்
அடுக்காய் வரும்
தும்மல். ..இருமல்.. !

தினம் இல்லை ..!
சிதறிடும் கவனத்தை
பதிவிடும் குக்கர் சூடு..!

வழியும் வியர்வை யுடன்
சமைத்ததை
மேசையில் விரிக்கையில்
மகன் சொல்வான்..
"பார்க்கலையா அம்மா ..
முழங்கையில் மாவு. ! "

" ஒ ..மௌன வலிகளின்
அடையாள தீற்றல் . !

துடைத்து நகர்கிறேன்....
அடுத்தவேளை சமைக்க..!

Thursday, February 20, 2014

" யாரோ " புன்னகை உதிர்க்க 
" யாரோ " இரு கரம் குவிக்க
" யாரோ" தோள் தொட்டு நலம் கேட்க 
" யாரோ" வலிக்க வலிக்க கை குலுக்க.. 

பிரிந்த கல்லூரி நட்பா ?
பிறந்த ஊரின் உறவா ?
அலுவலக தொடர்பா ?
வாடிக்கையாளரா ?

" யாரிவர் யாரிவர் ??"

தவித்து , தடுமாறி
நினைவுக் கிடங்கின்
கருக்கல் இடுக்குகளில்
இன்னாரென அறியுமுன்
என்னைக் கடப்பார் .
அந்த "யாரோ "

அதே நிகழ்வில் ..
"அடடா இவரா ? " என
ஒருவரை
இனம் கண்டு
இரு கை கூப்ப
எத்தனிக்கையில்

"யாரோ" என
என்னை எண்ணி
"இவர் " நகரும் தருணம்

பூக்கத் துவங்கிய
புன்னகை
உறைந்து விடுகிறது
என் உதடுகளில் ..!

-மரியா சிவா .
28-12-2013

உள் உறைந்த 
பனிக் கற்கள்..

மனம் மரத்து 
உடல் நடுங்கும் 
கடுங்குளிர் ...!

அருகிருந்து
கனகனப்பாய்
கதகதப்பைப்
போர்த்தும்
.
.
.

உன் சொற்கள் ..

-காலை வணக்கம்
மரியா சிவா ..

குளிரைப் போர்த்தியது
விடியும்வரை 
இரவு !
வலிந்து கவிழ்த்த உறைகள்
நெகிழ நின்றொளிரும் 
சுயம் ..!
காலை பயணம் துவக்க 
கதிரவன் அருகிருந்துக் 
கையசைப்பேன் ...

முகில்கள் உரசுகையில்
இடியொலி கேட்டு
ரசித்திருப்பேன்..

பின்னெழும் மின்னொளியை
சுட்டு விரலால்
தொடச் செல்வேன்.

சின்னஞ் சிறு மீன்களின்
சிமிட்டல் கண்டு
மெய்சிலிர்ப்பேன்.

இன்னபிற ஏக்கமெலாம்
ஈடேற ..

உடல் மறந்து பறவையாகி
உயரே .. உயரே
செல்கிறேன்

எல்லையிலா பெருவெளியில்
சிறகசைத்து..
சிறகசைத்து ..!
" இனிய காலை வணக்கம் "
- மரியா


கட்டியணைக்க யத்தனிக்கும்
கற்றூண் திண்மை – உன் 
கண்களில் ..!

இளங்கதிர் நின் 
சிறுகரங்கள் ஆணையில்
இடையின்றி இயங்கும் ,
புதுபூமியின் உதயம்
அருகில் , மிக விரைவில் !

காத்திரு கண்ணே ..!
நம்பிக்கைகள் பொய்ப்பதில்லை ..!
நம்பியவர் தோற்றதில்லை ..!!


செலுத்திடும் விசைதனில்
நிறுத்தல் இன்றி இயங்கிடும் ..
இறக்கைகள் உயரே பறந்திடும்...!

இடை விடா இயக்கங்களில்
எப்போதேனும் 
களைத்து சரிகையில்

இருப்பை உணர்த்தும்
உடலும் ,
மனம் அறியா
வயதும்.. !

- மரியா