Wednesday, August 28, 2013

உஷ் ..



உஷ் .. !
மெல்ல திறங்க..
அறைந்து மூடாதிங்க கதவை.
வாயிற்மணி அடிக்காதிங்க .
சின்னதாய் தட்டுங்க...

உஷ்...!
பாத்திரங்கள் கவனம் ..
நழுவ விடில்
உதறுகிறது உடம்பு ...
அலறுகிறதே தொலைக்காட்சி .
அணைத்தல் உத்தமம் ..

உஷ் ..!
மெல்ல மெல்ல நடங்க ..
மௌனமாய் சிரிங்க ..
சைகையில் பேசுங்க..
( உள் பெட்டிக்கு வருபவரும் ...)

உஷ் ..
ஒலியெழுப்பும் பேப்பர்காரர்
மணியடிக்கும் பால்காரர்
இவர்க்கெல்லாம் புரிய வைத்தல் நலம்

வீட்டின் புது சட்டமெல்லாம்
வீதியிலும் அமலாக்க வேண்டும்
“ உறக்கம் கெடும் அய்யா “ என
விளங்க வைக்க வேண்டும் !!!

#உஷ் பாப்பா தூங்கறாங்க ..!!
(சப்தமின்றி கமென்ட் போடுமாறு
கோரப்படுகிறீர்கள் ..இப்பதான் பாப்பா தூங்கறாங்க ..!)

பாப்பா பிறந்தாள்..

இமை மூடி உறங்குகையில்
இதழோரம் 
முகிழும் குறுஞ்சிரிப்பு..

ஒடுக்கிய சிறு கைகளில் 
ஒளிந்திருக்கும்
ஒய்யார கனவுகள்.

“ஊ” எனக் குவித்து
எதையோ சொல்ல
விழையும் உதட்டு பூக்கள்..

உதைத்துச் சிணுங்கும்
கால்களின் கீழ்
உழலும் நானும், எந்தன் வீடும் ..!

#கொஞ்ச நாளுக்கு பாப்பா தயவில் நிலைத் தகவல்

விடுமுறையில்

ஒருமுறை துவைத்து ..
இருமுறை பெருக்கி , கழுவி

இரவு வந்து
திறந்தாலும் இல்லம் பளிச்சென்று..
(அதுவும் .. பணிப்பெண் கைவண்ணம் !)

பலமுறை பெருக்கி ,
பகலெல்லாம் பாத்திரம் கழுவி

அடுக்களை விட்டு
அகலாத போதும் ...
அடடா வேலை அடுக்கடுக்காய் ...!

# நான்காண்டுக்குப் பின் நீண்ட விடுப்பு ...!
ஆஹா ...அலுவலகப் பணி சுகமானது ..
 — feeling tired.

அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து



பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறேன் .
ஒரு விடுமுறை தினம் .. 
சர்ச்சிலிருந்து பாதர் அழைப்பதாய் சேதி வந்ததும் ஓடினேன்..

அங்கு அறிமுகப்படுத்தப் பட்டேன் அவருக்கு..
சிவந்த நிறம்.. சற்று குள்ள உருவம்..
கை பிடித்து பேசினார்..கருணை வழியும் , மென்மையான குரல்..!
எங்கள் ஊரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் நிறுவ வந்திருப்பதாய் சொன்னார்.

அதற்குள் , ஊர் மக்கள் நிறைய சேர்ந்து விட, அவர்களுக்கு நான் மொழி பெயர்ப்பாளர் ஆனேன். மக்கள் பேச பேச அதை அவரிடம் ஆங்கிலத்தில் சொல்லி, அவர் சொல்வதை மக்களிடம் தமிழில் சொல்லி..

முதல் அறிமுகம் இப்படித்தான்.

அவர் அன்னை திரேசா..

அதன் பின் அங்கு இல்லம் உருவானது.. பிறகு வந்த கன்னியர்களுக்கு தமிழ் கற்கும் வரை , என் மொழி பெயர்ப்பு பணி தொடர்ந்தது..

கல்லூரி காலத்தில் படிப்பு தவிர எனக்கிருந்த ஒரே distraction அந்த இல்லம் தான்..குழநதைகள், முதியோர் என ஆதரவற்ற நெஞ்சங்களிடையே அன்பையும், நேரத்தையும் பகிர்ந்துக் கொண்டேன்.. அப்படியே இருக்கவும் விரும்பினேன்...!

பிரமிக்க வைக்கும் வாழ்க்கை நெறி கண்டு வியந்துப் போனேன்.. நிறைய கற்றும் கொண்டேன்..!

கல்கத்தாவில் இருந்து வரும் கன்னியர் , அன்னையின் வாழ்த்தை எனக்குத் தெரிவிக்கையில் பறப்பது போல் இருக்கும்.

அன்னை வரும் போது அவருடன் அமர்ந்து பேசியுள்ளேன்.

இன்று வாழ்க்கை முறை மாறி விட்டது...! குடும்பம், குழந்தைகள் என ஒரு புள்ளியில் எல்லாமே குவிந்து விட்டது.

ஆனாலும் அன்னையுடனும், அவர் இல்லத்திலும் கழித்த அந்த கணங்களை வாழ்வின் பொன்னான தருணமாய் இன்றும் மனதில் போற்றுகிறேன்..!

எனக்கு அனை திரேசா ஒருமுறை எழுதி தந்த வாசகம்.. “ Love Jesus with undivided Love “

நெஞ்சம் மறப்பதில்லை ..!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்னையே !


மெல்ல வதனம் சுருங்கும் .
மேகப் பஞ்சின் நிறம் மாறும்

விழிகளின் அடியில்
அழையாமல் வரும் கருவளையம் !

குரல் நடுங்க .. நடை குறையும்

முகம் நினவிருக்க
பெயர் மட்டும் மறக்கும்...!

நடுவரி நினைவிருக்க
பாடலின்
முதல்வரி மறக்கும்..!!

அருகே வந்து
முதுமை
கதவைத் திறக்கும்...

பணமோ பாதணியோ
எடுத்திட இயலாது ....

வெற்று கரங்களுடனே
விரைய வேண்டும்.. .
அடுத்த ஊருக்கு ...
# கண்ணாடி சொல்லும் கதை